தடை அதை உடை! ஆணாதிக்கம் கொண்ட தமிழ் சமூகத்தில் ஒரு பெண் பல தடைகளை உடைத்து முன்னேறுவது மிகவும் கடினமான காரியம் ஆகும். அதிலும் வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தில் வாழ்ந்து மிகவும் குறைந்த வயதில் நீதிபதி தேர்வில் வெற்றி பெறுவதெல்லாம் நினைத்து பார்க்க முடியாத விஷயமாகும். ஆனால் தனது வாழ்வில் எதிர்கொண்ட ஒவ்வொரு தடையையும் தவிடு பொடியாக்கி விரைவில் சிவில் நீதிபதியாக கீழமை நீதிமன்றத்தில் பொறுப்பேற்க இருக்கிறார் ஸ்ரீபதி.
தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழக அரசு பணியாளர் தேர்வையாணையத்தால் நடத்தப்பட்டது. இதில் விண்ணப்பம் செய்திருந்த 12 ஆயிரம் பேரில் 23 வயதான ஸ்ரீபதியும் ஒருவர். இதையடுத்து நடந்த முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றில் ஸ்ரீபதி உட்பட 472 பேர் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
நேர்முகத் தேர்வு நிறைவடைந்து இறுதி முடிவு வெளியான நிலையில் அன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது திரும்பும் பக்கமெல்லாம் தென்படுகிறது. அந்த புகைப்படத்தில் பழங்குடியின பெண் தனது குழந்தையுடன் அரசு பணியாளர் தேர்வையாணையம் முன்பு நின்று கொண்டு இருக்கிறார். அவர் சிவில் நீதிபதியாக தேர்வான நிலையில் அனைத்து ஊடகங்களின் தலைப்பு செய்தியிலும், பத்திரிகைகளின் முதல் பக்கத்திலும் அந்த புகைப்படம் தான் இடம்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்து திருப்பத்தூரில் உள்ள ஏலகிரி மலையில் வளர்ந்த ஸ்ரீபதி மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். எனினும் தனது தாயின் அசைக்க முடியாத ஆதரவுடன் கல்வியைத் தொடர்ந்தார். வாழ்க்கையில் வறுமை துரத்திய போதும் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் உணவகத்தில் பணியாற்றி ஸ்ரீபதியை படிக்க வைத்துள்ளனர்.
மேலும் படிங்ககுமாரி ஆன்ட்டிக்கு ஆதரவு தந்த முதல்வர்! சாலையோரக் கடையை திறக்க அனுமதி
ஸ்ரீமதி ஆரம்ப கல்வியை பயில்வதற்கு தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. மலை கிராமம் என்றால் நமக்கே தெரியும். பேருந்தை தவறிவிட்டால் பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாது. பள்ளிப்படிப்பை முடித்ததும் சட்டப்படிப்பை தேர்வு செய்து அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் ஐந்து வருடம் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
சிவில் நீதிபதிக்கான எழுத்து தேர்வு நடைபெற்ற நாள் இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை என்றே சொல்ல வேண்டும். திருமணமாகி குழந்தை பிறந்த இரண்டாவது நாளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் பயணித்து எழுத்து தேர்வில் பங்கேற்று அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார்.
மேலும் படிங்கஅரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஒரே தலித் பெண்
இது போன்ற சிரமங்களை பெரிதுபடுத்தாமல் மிகப்பெரிய லட்சியத்தை நோக்கிப் பயணித்ததால் தான் ஸ்ரீபதி நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றி பழங்குடியின பெண்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண் சமூக வளர்ச்சியின் வெற்றியாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தின் மிக இளம் வயது சிவில் நீதிபதியான பழங்குடியின பெண் என்ற பெருமை ஸ்ரீபதியிடமே இருக்கும்.