மெரினா கடற்கரை
சென்னையில் உள்ள மெரினா பீச் இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும். இந்த பீச் சுமார் 12 கிலோ தூரம் ஆகும். சென்னைக்கு சுற்றுலாவுக்காக வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவரும் மெரினா கடற்கரைக்கு வருகை தர வேண்டும். இங்குள்ள களங்கரை வெளிச்சத்தில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவை காண இனிமையாக இருக்கும். ஒரு நாள் முழுவதும் நீங்கள் இந்த கடற்கரையில் இருந்தால் கூட உங்களுக்கு நேரம் செல்வதே தெரியாது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
செயின் ஜார்ஜ் கோட்டையின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் அருங்காட்சியகம் ஆகும். இங்கு ஏராளமான பழங்காலப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 661 கலைப்பொருட்கள் மூன்று தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் அருங்காட்சியத்திற்குள் நுழைய இந்தியருக்கு கட்டணமாக 15 ரூபாயும், வெளிநாட்டவருக்கு 200 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அரசு அருங்காட்சியகம்
1851ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அரசு அருங்காட்சியகம் மெட்ராஸ் அருங்காட்சியகம் என அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதன் வளாகத்தில் 46 காட்சியகங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகம் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை பொதுமக்களின் பார்வைக்கு திறந்திருக்கும்.
மேலும் படிங்க Trekking Spots: தமிழகத்தின் கடினமான பத்து மலையேற்றம்
ஆயிரம் விளக்கு மசூதி
சென்னை ராயப்பேட்டை அருகே மவுண்ட் ரோட்டில் ஆயிரம் விளக்கு மசூதி உள்ளது. இது ஷியா இஸ்லாமியர்களின் தினசரி தொழுகை மற்றும் பிற பண்டிகை நிகழ்வுகளுக்கு ஒரு முக்கியமான கூடும் இடமாகும். மண்டபத்தை ஒளிரச் செய்ய ஆயிரம் விளக்குகள் தேவை என்ற நம்பிக்கையில் இந்த மசூதிக்கு அதன் பெயர் வந்தது.
கிண்டி தேசிய பூங்கா
இது இந்தியாவின் எட்டாவது சிறிய தேசிய பூங்காவாகும். இந்தப் பூங்காவில் கரும்புலிகள், புள்ளிமான்கள், குள்ளநரிகள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்த பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.
மேலும் படிங்க Bengaluru Tourism - பெங்களூருவின் பிரபலமான சுற்றுலா தலங்கள்
வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டம் உலகப் பொதுமறையை எழுதிய துறவி வள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாகும். இதன் கட்டுமானப் பணிகள் 1975ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1976ல் நிறைவுபெற்றது. இங்கு மிகப்பெரிய தேர் ஒன்றும் உள்ளது.
கபாலீஸ்வரர் கோயில்
மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில் நகரின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும். கோயிலின் மூலவராக இருந்து சுயம்புலிங்கம் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். இங்கு 37 மீட்டர் உயர கோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே செல்கின்றனர். மஹா சிவராத்திரியின் போது இந்தக் கோயில் களைகட்டும்.