பொதுவாகவே நம்மில் பல பேருக்கு மலையேற்றம் என்றால் மிகவும் பிடிக்கும். கரடு முரடான பாதையில் மூன்று முதல் நான்கு மணி நேரம் பயணம் மேற்கொண்டு உச்சயில் இருக்கும் சுவாமியை தரிசித்து இயற்கை அழகை ரசிக்கும் போது மறக்க முடியாத அனுபவம் கிடைக்கும். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கியமான மற்றும் கடினமான பத்து மலையேற்றம் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்
பொதிகை மலை
இதற்கு அகத்தியர் மலை என்றும் பெயர் உண்டு. இந்த மலை நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி கேரள எல்லையில் அமைந்துள்ளது. இது மிகவும் கடினமான மலை பயணமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 6 ஆயிரத்து 300 அடியில் மலை உச்சி இருக்கிறது. பொதிகை மலை உச்சியில் அகத்தியருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. கேரள எல்லை வழியாகவே இந்த மலையேற்றத்திற்கு அனுமதி கிடைக்கும்.
வெள்ளயங்கிரி மலை
கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மலை அமைந்துள்ளது. மலை முழுவதும் மேகங்கள் சூழந்து வெள்ளை நிறத்தில் காட்சியளிப்பதால் வெள்ளயங்கிரி மலை என்றழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 800 அடி உயரத்தில் இந்த மலை உள்ளது. மலை உச்சியில் சக்திவாய்ந்த வெள்ளயங்கிரி ஆண்டவர் அமைந்திருக்கிறார். இந்த மலையேற்றத்திற்கு ஏழு மணி நேரம் ஆகும்.
பர்வத மலை
இதை மலைகளின் அரசன் என குறிப்பிடலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலை சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டது. மலையின் உச்சியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட மல்லிகார்ஜூன சிவன் கோயில் உள்ளது.
சதுரகிரி மாலை
இந்த மலை விருதுநகர் - மதுரை மாவட்டங்களின் எல்லையில் அமைந்திருக்கிறது. 3 ஆயிரத்து 264 அடி உயரம் கொண்ட இந்த மலை உச்சயில் சுந்தரமகாலிங்கம் கோயில் இருக்கிறது. மூன்று முதல் நான்கு மணி நேரத்தில் இந்த மலையை ஏறிவிடலாம். செல்லும் வழியில் நிறைய நீரூற்றுகள் உள்ளன.
தலைமலை
இந்த மலையானது திருச்சி - நாமக்கல் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. தலைமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்டதாகும். ஐந்து பாதைகள் வழியாக இந்த மலையின் உச்சிக்குச் செல்லலாம். இந்த மலை மூலிகை மரங்களால் நிரம்பி இருக்கும்.
கொண்டரங்கி மலை
இந்த மலை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 3 ஆயிரத்து 800 அடி உயரத்தில் இந்த மலை செங்குத்தாக இருக்கும். இங்கு மல்லிகார்ஜூனர் கோயில் உள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால் மலை கூம்பு வடிவத்தில் தெரியும்.
சுவாமி மலை
இந்த மலை திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 4 ஆயிரத்து 626 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் சிறிய கோவில் உள்ளது. இந்த மலைக்கு செல்ல அரசாங்கம் 350 ரூபாய் வரை வசூலிக்கிறது. இயற்கை அழகை ரசித்துக் கொண்டே மலையேற்றம் செய்வதற்கு இது அற்புதமான மலையாகும்.
வனதுர்க்கை
இந்த மலை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலையில் உள்ள தேவதானபேட்டையில் அமைந்துள்ளது. மூன்றாயிரம் அடி உயரத்தில் வனதுர்க்கை அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
தவளகிரீஸ்வரர் மலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தவளகிரீஸ்வரர் மலை அமைந்திருக்கிறது. இது சுமார் ஆயிரத்து 500 அடி உயர மலையாகும். இங்கு மலையேற்றத்திற்கு கற்களால் ஆன பாதை அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்தில் மலையின் உச்சியை நாம் அடைந்துவிடலாம்.
தீர்த்தமலை
இந்த தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது சுமார் 3 ஆயிரம் அடி உயர மலையாகும். ஆனால் ஆயிரத்து 500 அடி வரை மட்டுமே நாம் அனுமதிக்கப்படுகிறோம். இங்கு சென்றால் தீர்த்தகிரீஸ்வரர் அருளை பெறலாம்.