தமிழகத்தின் முக்கியமான கோவில் நகரங்களில் ஒன்றாக மதுரையை குறிப்பிடலாம். இது கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பல கோயில்கள் மதுரை மாவட்டத்தில் உள்ளன.
மீனாட்சி அம்மன் கோயில்
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவியின் அவதாரமான மீனாட்சி அம்மனுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். வைகை ஆற்றின் தென் கரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் வளாகத்தில் சராசரியாக 45 முதல் 50 மீட்டர் உயரம் கொண்ட 14 கோபுரங்கள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம், கிளிக்கூண்டு மண்டபம், கொலு மண்டம் மற்றும் புது மண்டபம் இந்த கோயிலில் உள்ளது. மூலவர் மற்றும் அம்மன் சன்னதிகளை தனித்தனியாகத் தரிசிக்க விரைவு தரிசனக் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 வரை நீங்கள் இங்கு தரிசனம் செய்யலாம்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
மதுரை இரயில் நிலையத்தில் இருந்து சுமார் எட்டு கிலோ மிட்டர் தொலைவில் இந்தக் கோயில் உள்ளது. இது முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாகும். இந்தக் கோயில் ஒரு குடைவரைக் கோயிலாகும். இது 8ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். உறுதி வாய்ந்த கற்பாறையில் இறைவனின் திருமேனி செதுக்கப்பட்டுள்ளது.
திருமலை நாயக்கர் மஹால்
மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் புகழ்பெற திருமலை நாயக்க மன்னரால் இந்த மஹால் கட்டப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இங்கு தற்போது ஒலி - ஒளிக் காட்சி மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், 8.15 மணிக்கு தமிழிலும் நிகழ்வுறுகிறது.
மேலும் படிங்க கோவையின் 75 கி.மீ சுற்றளவில் உள்ள பசுமையான சுற்றுலா தலங்கள்
காந்தி அருங்காட்சியம்
மதுரையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மங்கம்மாள் அரண்மனையில் காந்தியின் புகைப்படக் காட்சியும், இந்திய விடுதலைப் போரின் நிகழ்வுகள் பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. காந்தி பயன்படுத்திய சில பொருட்களும் இங்குள்ளன.
அழகர் கோயில்
மதுரையில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அழகர் கோயில் இருக்கிறது. சோலை மலையில் அமைந்திருக்கும் இந்த கோவிலில் கள்ளழகர் மூலவராக வீற்றிருக்கிறார். தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில் தான் உள்ளது.
மேலும் படிங்க சென்னை மாநகரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்
தெப்பக்குளம்
மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அமைந்துள்ளது. திருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட இந்த இடம் நாளடைவில் தெப்பக்குளமாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. குளத்தின் மைய மண்டபத்தில் விநாயகர் கோயிலும் உள்ளது.