பெருங்குடல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மில் பலருக்கும் அவ்வளவாக இல்லை என்றே கூறலாம். குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் இன்று பெரும் பிரச்சனையாக மாற இதுவே முக்கிய காரணம்.
மேற்கத்திய நாடுகளிலேயே அதிகளவில் தாக்கிய இந்தப் பெருங்குடல் புற்றுநோய் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலில் உள்ள புற்றுநோய் செல்களின் கட்டுப்பாடு இல்லாத வளர்ச்சியால் ஏற்படும் ஒரு வகை புற்றுநோய் ஆகும். இது பெருங்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் படிக்க: அடிக்கடி கை கால்கள் மரத்து போவதற்கு காரணம் என்ன?
பெருங்குடல் புற்றுநோய் அதிகரிக்கக் காரணம்?
நம் ஊரில் பெருங்குடல் புற்று நோய் முன் ஒரு காலத்தில் அதிகம் கிடையாது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளிலேயே அதிகம் காணப்பட்டது. காரணம், வெளிநாடுகளில் அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது தான். அதனால் கழிவுகள் சரியாகப் போகாமல் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஆனால் இன்று நாமும் மேற்கத்திய உணவு முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளோம். நாமும் அதிகளவில் அசைவ உணவுகள் உட்கொள்கிறோம். தண்ணீரும் சரியாகக் குடிப்பதில்லை. அதே போல நம் உடல் செயல்பாடுகளும் குறைந்துவிட்டது. இதனால் நாமும் மலச்சிக்கல், மலக்குடல் பிரச்சனைக்கு ஆளாகியிருக்கோம்.
மலம் போகாமல் உங்கள் உடல் உள்ளேயே தங்கும்போது மலக்குடல் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்றொரு முக்கிய பிரச்சனையாக மருத்துவர்கள் கூறுவது, பெற்றோர் தங்கள் குழந்தைகளைக் காலையில் மலம் கழிக்க வைக்காமல் அவசர அவசரமாகப் பள்ளிக்கு அனுப்புவது. காலத்தில் தினசரி வாழ்ககையில் குழந்தைகளுக்கு இதைப் பழக்கத்தில் கொண்டு வந்தார்கள். ஆனால் இப்போது அவசர அவசரமாக சட்டையை மாட்டி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலே தான் பெற்றோர் குறியாக இருக்கிறார்கள். இது நாளடைவில் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் அதிகம் சாப்பிடுவதாலும், போதுமான உடற்பயிற்சி இல்லாததும், தண்ணீர் சரியாகக் குடிக்காததும் நாளடைவில் பெருங்குடல் பிரச்சனைகள் ஏற்பட காரணம் ஆகி விடுகிறது. இதனால் மலக்குடலில் புண்கள் வரலாம். இதுவே நாளடைவில் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடும்.
அறிகுறிகள் என்ன?
சாதாரணமாக போகும் மலத்தில் திடீரென எதாவது மாற்றம் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது குடல் இயக்கத்தில் மாற்றம் என்று கூறப்படுகிறது. திடீரென மலம் தண்ணீராகப் போகலாம், அல்லது மலச்சிக்கல் ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கவனிக்கணும். முதலில் இதைப் பற்றிப் பேச வெட்கப் படக்கூடாது. அடுத்த அறிகுறி, மலத்தில் ரத்தம் போகும். மூலநோய் மட்டுமின்றி புற்றுநோயினாலும் மலத்தில் ரத்தம் வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சில நேரங்களில் மலத்தில் ரத்தம் என்பது குடலில் புண் இருந்தால் வரலாம். இந்நிலையில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் தவிர்க்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
மேலும் படிக்க: கர்ப்பப்பை தொற்றுநோய் ஏற்பட காரணம் என்ன? மருத்துவரின் விளக்கம்!
வராமல் தடுப்பது எப்படி ?
இந்த பெருங்குடல் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை வராமல் தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறை ரொம்ப முக்கியம். உங்கள் உணவில் காய்கறிகள் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மது அருந்துவது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் அறவே கூடாது.