Kumari Aunty : குமாரி ஆன்ட்டிக்கு ஆதரவு தந்த முதல்வர்! சாலையோரக் கடையை திறக்க அனுமதி

குமாரி ஆன்ட்டிக்கு ஏற்பட்ட பிரச்சினையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையிட்டு காவல்துறையின் உத்தரவை வாபஸ் பெற வைத்துள்ளார்.

Raja Balaji
hyderabad popular food stall owner kumari aunty

சாலையோரத்தில் உணவகம் நடத்தும் ஒரு பெண்மணிக்கு மாநில முதலமைச்சர் நேரடியாக ஆதரவு அளிக்கும் விஷயத்தை நாம் எங்கேயாவது பார்த்திருப்போமா ? ஆம் அப்படியான விஷயம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மாதப்பூரில் சாலையோரத்தில் உணவகம் நடத்தும் தசாரி சாய் குமாரிக்கு நடந்துள்ளது. 

இவர் மாதப்பூரில் உள்ள ஐடிசி கோஹனூர் சந்திப்பு பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறார். கூகுள் வரைபடத்தில் தேடினால் சற்று கடினமாக இருக்கும். நீங்கள் INORBIT Mall வந்துவிட்டு அங்குள்ள எந்த நபரிடமும் பாப்ஜி மீல்ஸ் என்று கூறினால் அவர்கள் வழிகாட்டிவிடுவார்கள். 

தசாரி சாய் குமாரியை அங்கு உள்ள அனைவரும் குமாரி ஆன்ட்டி என்று அழைக்கின்றனர். அந்த ஏரியாவில் இவர் மிகவும் பிரபலமானவர் என்றே சொல்லலாம். தொழில் நிறுவனங்கள் நிறைந்த பரபரப்பான பகுதியில் ஏராளமான கடைகள் இருந்தாலும் பெரும்பாலானோர் குமாரி ஆன்ட்டி கடைக்கே வருகின்றனர். இதற்கான காரணம் குறைந்த விலைக்கு வயிறு நிறைய வீட்டு சாப்பாடு தயாரித்து வழங்குகிறார்.

kumari aunty food stall

காலை 11.30 அளவில் இருந்து மதியம் 3 மணி வரை இவரது கடை திறந்திருக்கிறது. சைவப் பிரியர்களுக்காக வெஜிடபிள் பிரியாணி, கோபி ரைஸ், கொங்குரா சாதம், எலுமிச்சை சாதம் என கலவை சாதங்களும், மீல்ஸிற்கு தேவையான சாம்பார், பருப்பு குழம்பு, ரசம், மோர் ஆகியவற்றையும் வைத்திருக்கிறார். இதனுடன் அவர் வழங்கும் சைட் டிஷ் உங்களை வியக்க வைக்கலாம். உருளைக்கிழங்கு பொரியல், கத்திரிக்காய் தொக்கு, பச்சை வெங்காயம் தருகிறார். சூடான சப்பாத்தியும் இவரது கடையில் உள்ளது.

அதேபோல அசைவப் பிரியர்களுக்கு சாதமுடன் சிக்கன் குழம்பு, முட்டை, சிக்கன் ஃபிரை, ஆட்டுக் குடல் வறுவல் தருகிறார். கொரோனா பேரிடருக்கு முன்பாக மீன் குழம்பு வழங்கிய அவர் அதன் பிறகு சில காரணங்களுக்காக அதை நிறுத்தியுள்ளார். இது அனைத்து சாலையோர கடைகளிலும் கிடைக்க கூடியது தானே என நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் யாரும் இந்தக் காலத்தில் 50 ரூபாய்க்கு அளவற்ற வெஜ் மீல்ஸூம், 70 ரூபாய்க்கு அளவற்ற அசைவ மீல்ஸூம் தருவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே கிடைத்தாலும் குமாரி ஆன்ட்டியின் கை பக்குவம் கிடைக்காது. நீங்கள் கொடுக்கும் காசிற்கு உரிய சுவை இருக்கும். இவருக்கு தெலுங்கு, இந்தியில் பேசத் தெரியும். தமிழ் மொழியும் இவருக்கு புரிகிறது. இவரிடம் UPI பரிவர்த்தனையும் உண்டு.

அங்கு வாடிக்கையாக வரும் சில நபர்களிடம் கேட்ட போது மூன்று வருடமாக மதிய வேளையில் இங்கு தான் சாப்பிடுகிறேன் என்றும் மலிவான விலையில் ருசியான உணவு கிடைக்கும் என்றும் மகிழ்ச்சியாகக் கூறினார். அங்குள்ள ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளைஞர்கள் சரியாக ஒரு மணி ஆனவுடன் இந்த கடைக்கு படையெடுகின்றனர். சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வடிவேலு சொல்வது போல அந்தப் பகுதியில் மிகப்பெரிய டிராஃபிக் ஜாம் ஏற்படுகிறது.

அங்கு வரும் நபர்கள் அமர்ந்து சாப்பிட பத்து இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தால் குமாரி ஆன்ட்டியால் என்ன செய்ய முடியும். இடப் பற்றாக்குறை இருந்தாலும் மின்னல் வேகத்தில் பரிமாறுவதில் கில்லாடியாக இருக்கிறார். பல தெலுங்கு யூடியூபர்கள், ஏன் சில தமிழ் யூடியூபர்கள் கூட இவரது கடைக்கு சென்று வீடியோ எடுத்துள்ளனர். கடின உழைப்பு காரணமாக இவர் பிரபலமடைந்த நிலையில் தொலைக்காட்சிகளும் குமாரி ஆன்ட்டியை பேட்டி எடுத்தன.

அனைத்தும் நன்றாக நடந்து கொண்டிருந்த தருணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாகக் கடை இருக்கிறது எனவே கடையை மூட வேண்டும் என காவல்துறையினர் உத்தரவு போட்டனர். மனமுடைந்த குமாரி ஆன்ட்டி வேறு வழியின்றி கடையை மூடியுள்ளார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வேகமாகப் பரவ நடிகர் சந்தீப் கிசன் உட்பட பலரும் குமாரி ஆன்ட்டிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இது தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கவனத்திற்கு சென்ற நிலையில் அவர் நேரடியாக தலையிட்டு காவல்துறை தங்களது உத்தரவை வாபஸ் பெற உத்தரவிட்டுள்ளார். இதனால் குமாரி ஆன்ட்டி மட்டுமல்ல பசியாற அவரது கடைக்கு வரும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Disclaimer