சேலைகள் என்றாலே பெண்களுக்கு தனி அழகு. புடவையை நேர்த்தியாகவும், அதற்கேற்ற ஆபரணங்களுடன் அணியும் போது அனைவருமே ராணியாகத் தான் தெரிவோம். ஆனால் என்ன இன்றைக்கு உள்ள பல பெண்களுக்கு புடவைகள் எப்படி கட்ட வேண்டும் என்பதே பலருக்கு தெரியாது. பண்டிகை மற்றும் வீட்டில் விசேசங்கள் என்றால் இன்றைக்கும் பெரும்பாலான பெண்கள் வீட்டில் உள்ள அம்மா அல்லது அக்காவின் உதவியைத் தான் நாடுவார்கள். இருந்தப்போதும் புடவைகளை நாமே கட்டுவது போன்று நிச்சயம் இருக்காது.
இது போன்ற புடவைக் கட்ட தெரியாத பெண்களுக்கு உதவியாக இருப்பது முந்தானை முன்கூட்டியே எடுத்து வைக்கும் ப்ரீ பிளேடிங் முறை. புதிதாக புடவைகள் கட்டும் போது ஒரு மணி நேரம் சென்றாலும் நம்மால் திருப்திகரமாக கட்ட முடியாது. இனி இந்த கவலை இல்லை. ப்ரீ பிளிடிங் செய்து வைத்துக் கொள்ளுங்கள் வெறும் 5 நிமிடத்தில் புடவைக் கட்ட தெரியாத பெண்களும் அழகாக புடவைகளைக் கட்டி கொள்ள முடியும். இதோ இன்றைக்கு சேலைகளை ப்ரீ பிளிடிங் செய்வது எப்படி? என்னவெல்லாம் பெண்கள் பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
சேலைகள் ப்ரீ பிளிடிங் செய்யும் முறைகள்:
- காட்டன் புடவைகளாக இருந்தாலும் பட்டுப் புடவைகளாக இருந்தாலும் சரி சேலைகளை முன்கூட்டியே ப்ரீ பிளிடிங் அதாவது முந்தானைகளை எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
- முதலில் நீங்கள் முந்தானைக்கான மடிப்புகளை எடுக்க வேண்டும். உங்களது உடல் வாகிற்கு ஏற்ப நீங்கள் மடிப்புகளை வைத்துக் கொள்ளலாம்.
- ஒல்லியான பெண்களாக இருந்தால் 8 முதல் 9 மடிப்புகள் வரை வைக்கலாம். அதே உடல் பருமான பெண்களாக இருந்தால் 5 முதல் 6 மடிப்புகள் எடுப்பது உங்களுக்கு எடுப்பாக இருக்கும்.
- சேலையின் மேல் முந்தியை தேர்வு செய்து மடிப்புகளை ஒரே சீராக வைக்க வேண்டும். தோள்பட்டையில் வைத்துக் கொண்டு உங்களுக்கு எவ்வளவு உயரம் தேவை? என்பதை தேர்வு செய்து பின் செய்துக் கொள்ளவும்.
- சேலை முந்தியின் கீழேயும் பின் செய்வதால் மடிப்புகள் அப்படியே கலையாமல் இருக்கும்.
- பின்னர் சேலைக் கட்டுவது போல புடவையை முன்பக்கமாக வைத்து இடுப்புப் பகுதி வரை இழுத்தி அதில் பின் செய்ய வேண்டும்.
- இதையடுத்து கீழ் முந்தானைக்கான மடிப்புகளை எடுக்க வேண்டும். இடுப்பில் சுற்றிக்கொண்டு உங்களது எவ்வளவு அகலம் தேவையோ? அந்த இடத்தில் பின் செய்துக் கொண்டு மடிப்புகளை எடுக்கத் தொடங்குங்கள். 4 அல்லது 5 மடிப்புகள் வந்தாலும் ஒரே சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மடிப்புகள் ஒரே சீராக இருக்கும்.
இது போன்று மேல் மற்றும் கீழ் முந்தானைகளை எடுத்துக் கொண்ட பின்னதாக அயர்ன் செய்துக் கொள்ளும் போது மடிப்புகள் களையாமல் அப்படியே நிற்கும். அடுத்த நாள் புடவைக் கட்டும் போது உங்களுக்கு மிகவும் நேர்த்தியாக இருக்கும்.