பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்திருந்த சலார் சீஸ் ஃபயர் முதல் பாகம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை வசூல் செய்தது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என நான்கு மொழிகளில் ஓடிடி வெளியீட்டிற்கு சலார் தயாராக உள்ளது.
இதன் இரண்டாம் பாகமான சௌரியங்க பர்வத்தை 2025ஆம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்திருந்த சலார் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும் 700 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது.
25 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய சலார் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. சர்வதேச டிஜிட்டல் தளமான நெட்பிளிக்ஸில் சலார் வெளியாகிறது. முதற்கட்டமாகத் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் மட்டுமே சலார் வெளியாகிறது. இந்தி பதிப்பு எப்போது வெளியிடப்படும் என நெட்பிளிக்ஸ் தளம் அறிவிக்கவில்லை.
திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு அதை அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாற்றி இந்திய திரையுலகை 2023ஆம் ஆண்டில் வெற்றிகரமாக நிறைவு செய்ய வைத்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சலார் இரண்டாம் பாகமான சௌரியங்க பர்வத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் 2025ல் செளரியங்க பர்வம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் படத்தின் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
திரையரங்குகளில் இப்படி ஒரு படம் வெளியாகி ஓடியதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். ஏனென்றால் இந்த படத்தில் பல தமிழ் யூடியூப்பர்கள் நடித்திருந்தனார். அதனால் படத்தின் புரோமோ, விளம்பரங்களை கண்டு இந்த படம் யூடியூப் உள்ளடக்கம் என நினைத்திருப்பீர்கள்.
ரமேஷ் வெங்கட் இயக்கிய இந்த படம் டிசம்பர் 29ஆம் தேதி வெளியாகி இருந்தது. அப்போது தமிழில் சலார் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. பத்து நாட்கள் இடைவெளியில் பொங்கல் விருந்தாக அரை டஜன் படங்கள் வெளியாகின. இதனிடையே பல திரையரங்குகள் அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களை ரி-ரிலீஸ் போல வெளியிட்டதால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்படம் டைட்டிலுக்கு மாறாக திரையரங்குகளை விட்டு ஓடி ஒளிந்து கொண்டது.
படத்தில் பரிதாபங்கள் கோபி சுதாகர், எருமை சாணி விஜய் மற்றும் ஸ்ரீஜா ஆகியோர் நடித்திருந்தனர். கவர்ச்சிக்காக யாஷிகா ஆனந்த் சேர்க்கப்பட்டு இருந்தார். ஏற்கெனவே இதே போல ஜாம்பி என்ற படம் வெளியாகி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுவும் ஹாரர் காமெடி திரைப்படம் தான். ஜனவரி 19ஆம் தேதி இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
எக்ஸ்ட்ராடினரி மேன்
வக்கன்தம் வம்ஸி இயக்கத்தில் நிதின், குண்டூர் காரம் புகழ் ஸ்ரீலீலா நடிப்பில் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி வெளியான எக்ஸ்ட்ராடினரி மேன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. படம் வெளியான போது சுமாரான விமர்சனங்களையே பெற்றது. தமிழில் ஃபார்ம் அவுட்டான ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். திரையரங்குகளில் இந்த படம் தோல்வியையே தழுவியது. எக்ஸ்ட்ராடினரி மேன் ஒரு ஆர்டினரி மேக்கிங் என்று சொல்லலாம்.
மேலும் படிங்க Tamil OTT releases : கிடா முதல் மார்கழி திங்கள் வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ்
பிலிப்ஸ்
மலையாள திரையுலகில் வெற்றிகரமாக ஓடிய பிலிப்ஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது.
ஆல்ப்ரெட் குரியன் ஜோசப் இயக்கிய இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் மாதுகுட்டி சேவியர், பாபு தாமஸ், நவானி தேவானந்த், அஜித் கோஷி, அன்ஷா மோகன், சார்லி, சச்சின் நச்சி ஆகியோர் நடித்திருந்தனர். மனைவியை இழந்து பெங்களூரில் மூன்று குழந்தைகளுடன் பிலிப்ஸ் என்பவர் வாழ்வது போல படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்தியன் போலீஸ்
பிரபல பாலிவுட் இயக்குநரான ரோகித் ஷெட்டியின் இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் சித்தார்த் மல்ஹோத்ரா, சில்பா ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.