தமிழர்கள் கொண்டாடும் பராம்பரிய பண்டிகைகளில் முதன்மை இடம் வகிக்கிறது தை திருநாள். உழைப்பை மட்டும் நம்பியிருந்த காலங்களில் தனக்கு உதவியாக இருந்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றியை தெரிவிக்கும் விழாவாக கொண்டாட தொடங்கிய திருநாள் பொங்கல். தங்கள் நிலத்தில் விளைந்த அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல்,மஞ்சல் குலை, பனங்கிழங்கு, காய்கறிகளையெல்லாம் வைத்து வழிபடுவார்கள்.
இந்நாளில் சர்க்கரை பொங்கலும், கரும்பும் எவ்வளவு முக்கியத்தும் பெறுகிறதோ? அது போன்று தான் பனங்கிழங்கும். கற்பக விருட்சம் எனப்படும் பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பனம் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கிழங்குகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. பொங்கல் திருநாளில் இதற்கு தனி மவுசு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெருமளவில் பனங்கிழங்கு விளைச்சல் செய்யப்பட்டு தை திருநாளில் அறுவடைக்குத் தயாராகும். ஆனால் இந்தாண்டு பெய்த அதிக மழைவின் காரணமாக திருச்செந்தூர் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் சற்று குறைந்துள்ளது.
மேலும் படிங்க: தைப் பொங்கலும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!
பனங்கிழக்கு விளைச்சல் செய்முறை:
பனை மரத்தில் மாசி மாதம் முதல் ஆடி வரை பதநீரும், நொங்கும் கிடைக்கும். பின்னர் இந்த நொங்குகள் அனைத்தும் பழமாகிறது. மரத்திலிருந்து கீழே விழக்கூடிய பழங்கள் அனைத்தும் சேகரிப்பட்டு மண்ணில் அடுக்காகாக அடுக்கி வைக்கப்பட்டு பனங்கிழங்குகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். தென் மாவட்டங்களில் தான் பனங்கிழங்கு அறுவடை அமோகமாக இருக்கும். குறிப்பாக திருச்செந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் தங்களது நிலத்தில் மட்டுமல்ல, வீடுகளுக்கு அருகில் இடம் இருந்தாலும் பனம்பழங்களை மண்ணில் புதைத்து வைப்பார்கள்.
பனம் பழங்களை சாகுபடி செய்வதற்காக பத்து அடி நீளம், பத்து அடி அகலத்திற்கு பாத்தி கட்டி கொள்வார்கள். இதனுள் கால் அடி ஆழத்துக்கு குழி தோண்டி பனம்பழ விதைகளை ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக அடுக்கி வைக்கப்படும். இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது. நிலத்தில் உள்ள தண்ணீரை உறிஞ்சி வளரக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மேற்கொள்வார்கள். அப்போது தான் 75 முதல் 90 நாள்களில் அதாவது மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். இது போன்ற முறைகளில் மேற்கொள்ளப்பட்ட பனங்கிழங்கு சாகுபடி தற்போது விளைச்சலுக்கு தயாராகிவிட்டது. தை திருநாளுக்காக மக்களும் ஆர்வத்துடன் சந்தைகளில் விற்பனையாகும் பனங்கிழங்கு கட்டுகளை வாங்கி மகிழ்கின்றனர்.
பனங்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீர்,நொங்கு போன்றவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக தை மாதத்தில் அறுவடையாகும் பனங்கிழங்கில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. பெண்களின் கர்ப்பப்பை பலம் அடைவது முதல் வயிறு, சிறுநீர் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரிசய்கிறது. அதிலும் பனங்கிழங்குகளை வேக வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிடும் போது உடல் வலிமை பெறுகிறது. இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் தான் தை திருநாளில் பனங்கிழங்கு முக்கிய இடம் வகிக்கிறது.
மேலும் படிங்க: ஜல்லிக்கட்டு காளைகளை அரவணைக்கும் கோவை கோசாலை!