Pongal Groceries : பொங்கலுக்கு வாங்க வேண்டிய மளிகைப் பொருட்கள்

நீங்கள் மளிகைப் பொருட்களை வாங்கி இருந்தாலும் இந்தக் கட்டுரையுடன் ஓப்பிட்டு ஏதாவது விடுபட்டு இருந்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

Raja Balaji
pongal grocery

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் வீட்டை வெள்ளையடிக்கும் மும்முரத்தில் இருப்போம். நேரம் எப்படி செல்கிறது எனப் புரியாது ஆனால் அதற்குள் போகி வந்துவிடும். அதன்பிறகு பொங்கல் பண்டிகைக்கு ஒருநாள் மட்டுமே இருக்கும். எனவே பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு மிகச்சரியாகத் திட்டமிடுங்கள். தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஏற்கெனவே புத்தாடைகளை வாங்கி இருப்பீர்கள். அதனால் பொங்கலுக்கு வாங்க வேண்டிய மளிகைப் பொருட்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

Pongal Essentials

மளிகை பொருட்கள்

தைப் பொங்கல் அன்று தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் வீடுகளில் சர்க்கரை பொங்கல் செய்யப்படும். இதற்கு உங்களுக்குப் பச்சரிசி பிரதானமாகத் தேவைப்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரை கிலோ பச்சரிசி முதல் ஒரு கிலோ பச்சரிசி வரை வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக அரை கிலோ உருண்டை வெல்லம் அல்லது மண்டை வெல்லம் வாங்கவும். பொங்கலின் சுவையை நீங்கள் பயன்படுத்தும் வெல்லமே தீர்மானிக்கும் என்பதால் அது தரமானதாக இருப்பது அவசியம்.

சர்க்கரை பொங்கல் செய்வதற்கு நேரமாகும்… எங்கள் வீட்டில் வெண் பொங்கல் தான் செய்யப் போகிறோம் என முடிவு செய்துவிட்டால் சிறு பருப்பு எனப்படும் பாசிப் பருப்பு அரை கிலோ வாங்கி விடுங்கள். சர்க்கரை பொங்கல் செய்வதற்கு நெய் மிகக் கட்டாயம். எனவே அரை கிலோ நெய்யை மளிகைப் பொருள் லிஸ்டில் சேருங்கள். சர்க்கரை பொங்கலுக்கு டால்டாவும் பயன்படுத்தலாம். 

சர்க்கரை பொங்கலுக்கு பயன்படுத்திட 100 கிராம் முந்திரி, 100 கிராம் உலர் திராட்சை, 50 கிராம் ஏலக்காய் பொடி ஆகியவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரமும் இந்த லிஸ்டில் இடம்பெறலாம். இது சர்க்கரை பொங்கலுக்கு நல்ல சுவை தரும்

மெதுவடை செய்வதற்கு உளுத்தம் பருப்பு கட்டாயம் தேவை, அதே போல மசால் வடை செய்வதற்கு கடலைப் பருப்பு தேவை. நீங்கள் மூன்று நாட்களும் பாரம்பரியமாக சமைக்க முடிவு செய்தால் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை தலா ஒரு கிலோ வாங்குங்கள்.

அடுத்ததாகப் பொங்கல் உணவில் கட்டாயம் பாயாசம் இடம்பெறும். எனவே வறுத்த சேமியா, பாயாசம் மிக்ஸ், குங்குமப் பூ, ஜவ்வரிசி, சர்க்கரை ஆகியவற்றை லிஸ்டில் சேருங்கள். வறுத்த சேமியா ஒரு பாக்கெட், ஜவ்வரிசி 250 கிராம், சர்க்கரை அரை கிலோ, குங்குமப் பூ 50 கிராம் வாங்கிக் கொள்ளுங்கள்.

சாம்பாருக்கு தேவையான துவரம் பருப்பு அரை கிலோ, மிளகாய் தூள் 250 கிராம், தனியா தூள், மஞ்சள் தூள், புளி பெருங்காயம், உப்பு, கடுகு ஆகியவையும் மளிகை பொருள் லிஸ்டில் இருக்கட்டும்.

இறுதியாகக் கேசரியில் பயன்படுத்த ஜாதிக்காய் வாங்கிவிடுங்கள்.

Disclaimer