பொதுவாகவே தைப் பொங்கல் என்பது தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தத்துவ வரிகளுக்கு ஏற்ப எந்த மனிதனாக இருந்தாலும் அவனுடைய வறுமை ஒழிந்து பெருமை சேரக்கூடிய நல்லதொரு நாளாக தைப் பொங்கல் இருக்கிறது.
தை மாதம் முதல் தேதியன்று சூரிய பகவான் ஒரு மனிதனுக்கு ராஜ யோகத்தை கொடுக்க கூடிய நவ கிரகங்களிலேயே முதல் கிரகமாக விளங்கக்கூடிய ஆதித்ய பகவான் தை மாதம் முதல் தேதி மகர ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார்.
12 ராசிகளில் சூரிய பகவான் எந்த ராசியில் இருந்தாலும் தை மாதத்தில் மகர ராசிக்கு சூரிய பகவான் வரும் போது உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் நன்மை கிடைக்கும். வாழ்க்கையில் எவ்வளவு சுணக்கம் இருந்தாலும் அந்த சுணக்கங்கள் விலகி இணக்கமான சூழல் ஏற்படக்கூடிய காலம் என்றால் அது தை மாதம் முதல் தேதி. தை முதல் நாளில் எந்த முயற்சி எடுத்தாலும் அது வெற்றிகரமாக அமையும். அது முத்தாய்ப்பாக முன்னேற்றப் பாதையில் அமையும்.
தைப்பொங்கல் வந்துவிட்டாலே எப்போது பொங்கல் வைக்க வேண்டும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துவிடும். இந்த வருடம் எப்போது பொங்கல் வைக்க வேண்டும் ?
இந்த வருடம் மட்டுமல்ல எந்த வருடமாக இருந்தாலும் மகர ராசிக்கு சூரிய பகவான் வருகை தரும் தை முதல் நாளில் காலை நேரத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பாக பொங்கல் வைப்பது மிக மிக நன்மை. சில வீடுகளில் இது சற்று கடினமானதாகத் தோன்றும். அதிகபட்சம் 12 மணி அதாவது நண்பகல் முன்பு பொங்கல் வைக்க வேண்டும்.
விரகு அடுப்பில் பொங்கல் வைப்பது மிகச் சிறந்தது. பொங்கல் வைப்பதற்கு பச்சரிசியுடன் சர்க்கரை பயன்படுத்துவதற்கு பதிலாக மண்டை வெல்லம் என சொல்லக்கூடிய உருண்டை வெல்லத்தை பயன்டுத்துவது நல்லது.
கிராமங்களில் பொங்கல் வைப்பதற்கு மண் பானையை பயன்படுத்துவர். நகரங்களில் மண் பானை பயன்படுத்த வாய்ப்பு குறைவு என்றால் பித்தளை பானை பயன்படுத்தவும்.
மண் பானையை இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வாங்கி அதை நன்கு சுத்தப்படுத்தி விடுங்கள். ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் மண் பானையை வைக்க வேண்டும். பொங்கல் பானையில் கோலம் போடுவதை விட அதில் உங்கள் பெயரின் முதல் எழுத்தை எழுதுவது நல்லது.
அந்த எழுத்து மீது கோலம் போட வேண்டும். நீங்கள் எழுதிய எழுத்து யாருக்கும் புரியக் கூடாது, தெரியவும் கூடாது. குலதெய்வத்தை வேண்டி சூரியனை பார்த்து பொங்கல் வைக்க ஆரம்பிக்கவும். பொங்கல் தெற்கு பக்கம் பொங்கினால் எதிரிகள், தேவையில்லாத சிக்கல்களில் இருந்து நீங்கள் விடுபடலாம். அனைத்து திசைகளிலும் சரிசமமாகப் பொங்கல் பொங்கினால் குடும்பத்திற்கு மிகப்பெரிய மேன்மை கிடைக்கும்.