உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இயற்கைவெளியில் சந்தித்து பொங்கலுக்கு தயாரித்த இனிப்புகளைப் பரிமாறி சந்தோஷம் அடைவதே காணும் பொங்கலாகும். இந்த நாள் சுற்றிப் பார்க்கும் நாளாகக் குறிக்கப்படுகிறது. வழக்கமாக காணும் பொங்கலன்று பொதுமக்கள் பிடித்தமான ஆடைகள் அணிந்து உல்லாசப் பயணத்திற்கு செல்வார்கள்.
நீங்கள் சென்னையை சேர்ந்த நபராக இருந்தால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு கட்டாயம் செல்லுங்கள்.
கடற்கரைகள்
காணும் பொங்கலை கொண்டாட சிறந்த இடமாகக் கடற்கரைகளை குறிப்பிடலாம். மதியம் மூன்று மணி அளவில் வீட்டை விட்டு புறப்பட்டு நான்கு மணிக்குள் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உட்பட சென்னையில் உள்ள பிரபலமான கடற்கரைகளில் ஒன்றை தேர்வு செய்து அங்கு செல்லுங்கள். கண்டிப்பாக காணும் பொங்கலன்று கூட்டம் அலைமோதும்.
அலைகளை நன்றாக பார்க்க கூடிய இடத்திற்கு சென்று அமருங்கள். அங்கு நீங்கள் நண்பர்கள், உறவினர்களை சந்தித்தால் கூடுதல் சிறப்பு. அவர்களுடன் பேச ஆரம்பித்தால் உங்களுக்கு நேரம் செல்வதே தெரியாது. வீட்டில் சமைத்த பொங்கல் பலகாரங்களைப் பகிர்ந்து மகிழுங்கள்.
காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். எனவே கவனமாகவும் இருக்க வேண்டும். சென்னை மட்டுமல்ல திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நபர்களாக இருந்தாலும் இந்த கடற்கரைகளுக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.
நீங்கள் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த நபராக இருந்தால் பாண்டிச்சேரிக்கு செல்லாம். அதேபோல கடலோர மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் சொந்த ஊரில் உள்ள கடற்கரைகளுக்கு செல்லுங்கள். இதர மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் அணை பகுதி, ஏரிகளுக்கு செல்லலாம்.
மேலும் படிங்க Kerala Holiday Plan: பொங்கல் விடுமுறையை இயற்கையோடு ரசிக்க வேண்டுமா? கேரளாவிற்கு ஒரு ட்ரிப் போடுங்க!
பொழுதுபோக்கு பூங்கா
காணும் பொங்கல் கொண்டாட்டத்தை காலையிலேயே தொடங்க விரும்பினால் சிரமம் பார்க்காமல் ஈ.சி.ஆர் வரை செல்லுங்கள். எம்.ஜி.எம், வி.ஜி.பி உட்பட பல பொதுழுபோக்கு பூங்காக்கள் உங்களை ஆவலுடன் எதிர்பார்த்து ஆஃபருடன் காத்திருக்கின்றன.
எம்.ஜி.எம்-ல் இருந்து இன்னும் கொஞ்சம் கிலோ மீட்டர்கள் சென்றால் அங்கு முட்டுக்காடு போட் ஹவுஸ் இருக்கும். இது தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு குறைந்த செலவில் குடும்பத்துடன் போட்டிங் சென்று மகிழலாம். காஞ்சிபுரம், பூந்தமல்லி, திருவள்ளூர் பகுதி மக்கள் குயின்ஸ்லேண்ட் அல்லது கிஷ்கிந்தாவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
திரையரங்குகள்
இதைக் கடைசி சாய்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அனைவருமே புதுப்படங்களை பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் தமிழில் மட்டும் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. அதனால் பார்க்காத படங்களை தேர்வு செய்து குடும்பத்துடன் நான்கு மணி நேரம் நன்றாகச் செலவிடலாம்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதால் எந்தவித கவலையின்றி தைரியமாக வெளியே சென்று காணும்பொங்கலை கொண்டாடுங்கள்.