கல்யாண நிகழ்ச்சிகள், பிறந்தநாள் விழாக்கள் அல்லது திருவிழா போன்ற கொண்டாட்டங்களில் பெண்கள் பலரும் ஹெவி மேக்அப் அணிவது உண்டு. பெண்கள் வெளியே சென்று வந்தப் பிறகு இரவு தூங்குவதற்கு முன் தங்கள் முகத்தில் உள்ள மேக்அப்பை அகற்றுவது மிகவும் முக்கியமானது. நீங்கள் க்ளென்சரை மறந்து விட்டீர்கள் அல்லது அதை வாங்க முடியவில்லை என்றால், எளிதாகக் வீட்டில் கிடைக்கும் இந்த இயற்கை க்ளென்சர்களைப் பயன்படுத்தலாம். மேக்அப்பை அகற்றிய பிறகு, உங்கள் முகத்தை நன்கு கழுவி, அதன் பிறகு மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்தலாம்.
எண்ணெய்:
தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் அல்லது வேறு ஏதேனும் இயற்கையான சுத்தமான எண்ணெய்களை மேக்அப் அகற்ற பயன்படுத்தலாம். உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எண்ணெய் எடுத்து முகம் முழுவதும் பூசவும். அதன் பிறகு ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து முகம் முழுவதும் உருட்டி, மேக்அப்பை அகற்றலாம். எண்ணெயைப் பூசுவதால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு சென்சிட்டிவ் சருமம் இருந்தால், இந்த எண்ணெய்யுடன் கொஞ்சம் பன்னீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
யோகர்ட் (தயிர்):
ஃப்ளேவர் இல்லாத யோகர்ட் நம் முகத்தில் மேக்அப் அகற்ற பயன்படுத்தலாம். இல்லையெனில் தயிர் வீட்டில் தயாரித்ததாக இருந்தால் இன்னும் சிறப்பு. யோகர்ட்டை ஒரு பஞ்சு உருண்டை மூலம் முகம் முழுவதும் பூசவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவவும். யோகர்ட் உங்கள் சருமத்தில் ஈரப்பதம் நீடித்திருக்க உதவுகிறது. மேலும் இது உங்கள் சருமத்திற்கு நல்ல தோற்றத்தையும் தரும்.
பால்:
மிக பொதுவாகப் பயன்படுத்தப்படும் க்ளென்சர்களில் இதுவும் ஒன்று. பாலை எடுத்துக்கொண்டு அதை சருமத்தில் பஞ்சு உருண்டை மூலமாகப் பூச வேண்டும். பாலில் இயற்கையான கொழுப்புகளும் புரதங்களும் இருப்பதால், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள இது உதவுகிறது.
மேலும் படிக்க: பாதங்களை அழகாக்க வீட்டிலேயே பெடிக்யூர் செய்துக் கோங்க!
தேன்:
தேன் மூலமாக சருமத்திற்கு கிடைக்கும் நற்பலன்கள் ஏராளம். இது ஒரு சிறந்த க்ளென்சராகவும் இருக்கிறது. தேனை அப்படியே முகம் முழுவதும் பூசி விட்டு, 10 நிமிடங்கள் காத்திருக்கவும். அதன் பிறகு தேனைக் கழுவும்போது கூடவே முகத்தில் உள்ள மேக்அப்பும் வந்துவிடும். எண்ணெய்ப் பசை நிறைந்த சருமத்திற்கு, ஒரு சில துளிகள் எலுமிச்சை சாற்றை தேனுடன் சேர்த்துக் கொள்ளலாம். தேன் ஆன்டிபாக்டீரியல் பண்பு கொண்டது என்பதால் முகப்பருக்களைக் குறைப்பதோடு, இறந்த செல்களையும் அகற்ற உதவும்.
பேபி ஷாம்பூ:
நம் கண்கள் மிகவும் நாசுக்கானவை. அதை முகத்தின் மற்ற பகுதிகளை விடவும் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். கண் மேக்அப்பை அகற்ற பேபி ஷாம்பூவைப் பயன்படுத்தலாம். முகத்தை சுத்தம் செய்து முடிக்கும் வரை கண்களைத் தொடர்ந்து மூடி இருக்க வேண்டும். கண் இமைகளை வெதுவெதுப்பான நீரால் கழுவிக்கொள்ளவும். கொஞ்சம் பேபி ஷாம்பூவை பஞ்சில் தொட்டு, கண்ணிமை முழுவதும் பூசவும். அதன் பிறகு, ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் வைத்து, மிருதுவாகத் துடைத்து எடுக்கவும். முகத்தில் உள்ள எல்லா மேக்அப்களை இந்த ஷாம்பூ அகற்றி விடும். பிறகு உலர்ந்த துண்டால் முகத்தில் துடைத்து எடுக்கவும்.
மேலும் படிக்க: இயற்கையான முறையில் உதடு வெடிப்புகளை சரி செய்யும் டிப்ஸ்!
Image source: google