'தைப்பொங்கல்னா மற்ற ஊர்களுக்கு எப்படியோ? எங்களுக்குத் தெரியாது. ஆனால் இங்க ஊர் மக்கள் ஒன்னா சேர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டுல தான் இருப்போம் என மகிழ்ச்சியுடன் மதுரை மக்கள் கூறுகின்றனர்'. தமிழர்கள் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்துன் இருப்பவர்கள் என வாய்மொழியாக மட்டும் கூறாமல் பொங்கல் பண்டிகையின் வாயிலாக உலகிற்கே எடுத்துரைக்கின்றனர். எத்தனை தடைகள், எத்தனை வழக்குகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து கம்பீரமாக நிற்கிறது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு.
தை முதல் நாள் வந்தாலே காலையில் சூரிய பொங்கல் வைக்கும் பழக்கம் உள்ளது. அவனியாபுரத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்க அப்பகுதி மக்கள் துள்ளிக்குதித்து இடம் பிடிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். வழக்கம் போல இந்தாண்டும் ஜல்லிக்கட்டிற்கானப் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டிற்காக பல லட்சம் ரூபாய் செலவில், விழா ஏற்பாடுகள் நடைபெறுகிறது. வாடிவாசல் அமைப்பது தொடங்கி 3 அடுக்கு தடுப்பு வேலிகள், அமரும் இருக்கைகள், கண்காணிப்பு கேமிராக்கள் என பணிகள் அனைத்தும் துரிதமாக நடைபெறுகிறது. அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தடுப்பு வேலிகள், ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யும் இடம் மற்றும் வீரர்களைப் பரிசோதனை செய்வதற்கென்று தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் களத்தில் அடிபடாமல் இருப்பதற்காக தென்னை நார்கள் போடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதாக ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது. இதுவரை அவனியாபுரம் களத்திற்காக 2400 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 1784 வீரர்கள் பங்கேற்பதாக முன்பதிவு செய்துள்ளனர். இந்த வீரர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி வாகை சூட காத்திருக்கின்றனர். திமிரோடும், திமிலோடும் வரக்கூடிய காளைகள் மற்றும் காளையர்களுக்கு வழங்கும் பரிசுகளும் தயார் நிலையில் உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
அவனியாபுரத்தில் எவ்வித பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வாடிவாசல், மாடுகளை அழைத்து வரக்கூடிய கலெக்ஷன் பாயிண்ட், மாடு பரிசோதனை செய்யும் இடம் போன்றவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்படவுள்ளது. மக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கும் விதமாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிங்க: ஜல்லிக்கட்டு களத்திற்கு ரெடியாகும் மதுரை காளைகள்!
தமிழர் பண்பாட்டை உலகறிய பறைசாற்றவும், கலாச்சாரத்தை அழியாமல் பாதுகாக்கவும் எங்கள் முன்னோர்கள் வழி நாங்களும் இந்த ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்துகிறோம் என அவனியாபுரம் மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். இந்த தைத்திருநாள் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகள் கடந்தாலும் எங்களது தமிழர் பண்பாட்டை மறக்க மாட்டோம் எனவும் மார்த்தட்டிக் கொள்கின்றனர்.