குழந்தைகள் வளர வளர அவர்களுடன் சேர்ந்து குறும்புத் தனமும் வளர்கிறது. குழந்தைகளுக்கு ஒரு பொருளோ அல்லது ஏதேனும் விஷயமோ வேண்டுமென்றால் அதை எப்படியாவது அழுது புரண்டு வாங்கி விடுவார்கள். பெரும்பாலான குழந்தைகள் பேச ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர்களுக்கு கோபம், பிடிவாதம் போன்ற உணர்ச்சிகள் ஏற்பட துடங்கிவிடுகிறது. என்னதான் பெற்றோர்கள் சில நேரங்களில் அடம்பிடிக்கும் குழந்தையை சமாதானப்படுத்த முயன்றாலும் அவர்கள் காது கொடுத்து கேட்பதே இல்லை. இப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளை கையாள்வது எப்படி ?

குழந்தை அடம்பிடிக்க காரணம் என்ன?

குழந்தைகள் தங்கள் சூழலை பாதுகாப்பு இல்லாததாக நினைத்தால் பிடிவாதத்தை கையில் எடுக்கிறார்கள். சில குழந்தைகள் புதிய இடத்திற்கு சென்றாலோ, புதிய பள்ளியில் சேர்ந்தாலோ அல்லது புது மனிதர்கள் தங்கள் வாழ்விற்குள் நுழைவதை உணர்ந்தாலோ பிடிவாதமாக நடந்து கொள்ள பழகுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம், பெற்றோர்கள் இரண்டாம் குழந்தைக்கு தங்கள் கவனத்தையும் அன்பையும் தருகையில் முதல் குழந்தை அவர்கள் கவனத்தை ஈர்க்க பிடிவாதம் செய்கிறார்கள்.

மேலும் படிக்க:சிறந்த பெற்றோராக இருக்க வேண்டுமா? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இவை தான்!

அணைத்து பொருட்களையும் எளிதாக பெற்றுப் பழகிய பிள்ளைகள் பிடிவாதத்தை தொடர்ந்து கையில் எடுப்பது வழக்கம். தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத குழந்தைகளும் பிடிவாதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள். அதிகத் தண்டனை பெற்ற குழந்தைகளும் பிடிவாதத் தன்மையுடன் காணப்படுகிறார்கள்.

குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கும் போது பெரும்பாலான பெற்றோர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அதன் காரணமாக பிடிவாதத்திற்கு சரியானத் தீர்வு தண்டனை என்றும் முடிவிற்கு வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து தண்டனை பெரும் குழந்தைகள் அதனை அனுதாபத்தை சம்பாதிக்கும் தந்திரமாகவே நினைத்து தொடர்ந்து அடம் பிடித்து அடியும் வாங்கி கொள்வார்கள். குழந்தையின் அழுகையை பார்த்து பெற்றோர்களும் மனசு மாறி அவர்கள் அடம்பிடித்து கேட்கிற விஷயத்தை செய்து கொடுக்கிறார்கள். நாளடைவில் இது அந்த குழந்தையின் குணமாக மாறிவிடுகிறது.

மேலும் படிக்க:குழந்தைக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

பிடிவாதத்தைக் கையாள்வது எப்படி?

  • குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கையில் நேரடியாகவும், தெளிவாகவும், அதற்க்கு எதிரான பிடிவாதத்தை பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டும்.
  • அடம் பிடித்து அழும் குழந்தையோடு கண் தொடர்பு கொண்டு பேசுவதும் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும். தண்டனைக்குப் பதிலாக பிரச்சனையைத் தீர்க்க குழந்தையிடம் பேசுங்கள். அதாவது நம் பொருளாதார சூழலை முன்கூட்டியே சொல்லிப் பழக்கலாம்.
  • சிறு சிறு செயல்களிலும் அவர்களைப் பாராட்டுவதை தொடர்ந்து செய்வதன் மூலம் அவர்களுக்குள் ஒரு மேன்மைத்தனம் உருவாகும். ஒவ்வொரு பொருளையும் அவர்கள் கேட்கும் போது அதற்கு சமமான உழைப்பை அவர்களிடமிருந்து பெறுவதை பெற்றோர்கள் வழக்கமாக்கி கொள்வது நல்லது.
  • உதாரணமாக, வீட்டுவேலை செய்தால் நோட்டு புக், விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தரப்படும் என்று கூறலாம். குறிப்பாக பிள்ளைகள் பிடிவாதத்தோடு பேசுகையில் அவர்களிடம் வாதம் புரிவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
  • மேலும் அவர்கள் அழுகைக்கு மரியாதை தருவதை குறைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரம் எந்த செயலையும் செய்தே ஆக வேண்டும் என வற்புறுத்துவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.
  • குழந்தைகளை கட்டாயப்படுத்தினால், அவர்கள் செய்யக்கூடாத அனைத்தையும் செய்வார்கள். உதாரணமாக, நடனம் விரும்பாத குழந்தையை நடன பள்ளியில் சேர்ப்பது, விரும்பாத உணவை மிரட்டி சாப்பிட வைப்பது, பிடிக்காத பொருளை அவர்களிடம் திணிப்பது போன்றவைகளை பெற்றோர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
  • குழந்தைகளை கண்காணிப்பில் வைத்துக்கொண்டு அவர்களே பிடிவாதத்தை சரிசெய்து கொண்டு வரும் அவகாசத்தை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்.
  • அடுத்தவர்களின் கருத்துக்கு பயந்து குழந்தையின் பிடிவாதத்திற்கு செவி கொடுக்க தொடங்கிவிட்டால் அந்த குழந்தையை பிடிவாதத்தில் இருந்து மீட்பது கடினம்.
  • விலையுயர்ந்த பொருளை விரும்பும் குழந்தைக்கு விலை குறைவான பொருள் வாங்கிக்கொள்ளும் சலுகையை தரலாம்.
  • குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிறப்பாக நடந்துகொள்ளும்போது பாராட்ட பழகுங்கள்.
  • குழந்தையின் பிடிவாதத்தை பிடிவாதத்தால் மாற்றுவது என்பதை ஒரு கலையாக பெற்றோர்கள் பின்பற்றத் துவங்கினால் பிள்ளைகளின் மாற்றம் எளிதில் சாத்தியமாகும்.

Image source: google