“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, வேம்பக்குழம்பு சமைத்து உண்டால் உடலுக்கு அமிர்தமாம்” என்ற கூற்றிற்கு இணங்க வேப்பமரம் அத்துணை மருத்துவக் குணங்களை தன் வசம் கொண்டுள்ளது. இலை, காய், பட்டை, வேர், பூ என வேப்பமரத்தில் உள்ள அனைத்தையும் நம்முடைய எவ்வித தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். அம்மை நோய் முதல் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிப்பதற்கு, சரும பராமரிப்பிற்கு என பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதால் தான் நம் முன்னோர்கள் மருந்தாக மட்டுமின்றி உணவுப் பொருளாகவும் வேம்பைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டு வேப்பம் பூவில் சட்னி தயார் செய்வது எப்படி? என்னென்ன மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது? என்பது பற்றிய விபரங்களை இங்கே அறிந்துக் கொள்வோம். இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

மேலும் படிக்க:தினமும் இந்த ஜூஸ் குடிங்க. கண்டிப்பாக முகம் பளபளப்பாகும்!

தேவையான பொருட்கள்:

  • வேப்பம் பூ- 2 கப்
  • கடலை பருப்பு - கால் கப்
  • உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வத்தல்- 4
  • பெருங்காயம் - தேவையான அளவு
  • உப்பு- தேவையான அளவு
  • தேங்காய் துருவல்- கால் கப்

வேப்பம் பூ சட்னி செய்முறை:

  • முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பொன்னிறமாக வந்ததும் தனியாக பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் தேங்காய் துருவல் மற்றும் வேப்பம் பூ இரண்டையும் சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு மற்றும் தேங்காய் துருவல், வேப்பம் பூ போன்றவற்றை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் தாளித்துக் கொட்டினால் போதும் சுவையான வேப்பம் பூ சட்னி ரெடி.
  • ஒருவேளை சட்னியாக செய்யப்பிடிக்கவில்லை என்றால், புளி அல்லது 1 தக்காளி சேர்த்து வேப்பம் பூ துவையல் செய்து சாப்பிடலாம். குறிப்பாக பெண்கள் மாதத்திற்கு இருமுறையாவது வேப்பம் பூ துவையல் அல்லது சட்னி செய்து சாப்பிடும் போது மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.
மேலும் படிக்க:சுவையான கொத்து சப்பாத்தி ரெசிபி டிப்ஸ்!

வேப்பம் பூ சட்னியில் உள்ள மருத்துவக் குணங்கள்:

பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் வேப்பங்கொழுத்தி அல்லது வேப்பங்கொழுத்தை அரைத்து ஜூஸ் போன்ற குடிப்பதைப் பார்த்திருப்போம். இது வயிற்று வலியைக் குணமாக்குவதோடு ரத்தப் போக்கை சீராக்கும். ஆனால் என்ன? கசப்பு சுவை அதிகமாக இருக்கும் என்பதால் அப்படியே குடிப்பது என்பது சிரமம். இது போன்ற நேரத்தில் நீங்கள் வேப்பம் பூ சட்னி செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதற்கும், சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவியாக உள்ளது.