மாட்டுப் பொங்கலன்று வீட்டில் வளர்க்கும் பசு, உழவு மாடு, ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிப்பது வழக்கம். மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கொண்டாட்டம் இருப்பதால் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து அழகு பார்ப்பது அவசியம். பசு மற்றும் உழவு மாடுகளை அலங்கரிப்பதற்கும் காளைகளை அலங்கரிப்பதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன.
பொதுவாகவே மாடுகளின் உடல் முழுவதும் வர்ணம் பூசுவது தவறு. கொம்பு, கழுத்து, நெத்தி, திமில், கால்கள் ஆகியவற்றில் அலங்காரம் செய்தால் போதுமானது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் வர்ணம் பூசினால் அதில் இருக்கும் ரசாயனப் பொருட்கள் மாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். மாட்டு சந்தையில் கிடைக்கும் சில பொருட்களையும், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே மாட்டை அழகாக அலங்கரிக்கலாம்.
அலங்காரத்திற்கு மஞ்சள், குங்குமம், விபூதி, அரியக்குடி மணி, கழுத்து கயிறு, கொம்புக் கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவை போதும். அந்த நன்நாளில் மாட்டை நன்றாகக் குளிப்பாட்டுங்கள். முடியைத் தவிர மாட்டின் மீது தூசி, சானம், சேறு என எதுவுமின்றி மாட்டை தூய்மையாகக் குளிப்பாட்டி இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் தேங்காய் நார் பயன்படுத்தலாம்.
அடுத்ததாக மாட்டுக்கு அலங்காரம் செய்கிறோம் என்ற பெயரில் அதன் நிறத்தை முற்றிலும் மாற்றும் கலர் பொடிகளைப் பயன்படுத்தாதீர்கள். இதுவும் மிகவும் தவறு. ஏனென்றால் கலர் பொடி தயாரிக்க ரசாயனம் பயன்படுத்தி இருப்பார்கள். பொடியில் இருக்கும் ரசாயனம் மாட்டின் தோல் வழியாக உடலில் இறங்கி அந்தப் பகுதியின் முடிகள் உதிர்ந்து சொட்டையாகத் தெரியும். ரசாயனம் கலந்த பொடியைப் பயன்படுத்தினால் மாட்டுக்கு முடி வளராது.
அதேபோல மாட்டின் மீது வண்ண ஜிகினா உபயோகிக்க வேண்டாம். ஜிகினாவிலும் ரசாயனப் பொருள் இருக்கும். இவை இல்லாமலேயே எந்த மாடாக இருந்தாலும் மஞ்சள், குங்குமம், விபூதி பயன்படுத்தி அலங்கரியுங்கள். மஞ்சள் கிழங்கை உரசி அதில் தண்ணீர் கலந்து மாட்டின் மீது பயன்படுத்துங்கள். நெற்றி, திமில், கொம்பு, கால் பகுதிகளில் மஞ்சள் பயன்படுத்தவும். குங்குமம் மற்றும் விபூதியை நெற்றியில் பயன்படுத்துங்கள். மாடு வெள்ளை நிறம் என்றால் விபூதி பயன்படுத்தத் தேவையில்லை.
மாட்டுக்கு அணிவிக்கப்படுவதற்காகவே நெட்டி மாலைகள் தயாரிக்கப்படுகின்றன. மாடுகளின் கழுத்தில் இவை அணியப்படும் போது குளிர்ச்சியாக இருக்கும். இந்த நெட்டிகள் ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களில் தண்ணீர் இருக்கும் போது வளரும். தண்ணீர் இல்லையென்றால் நெட்டிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். மேலும் குளத்தில் மீன் வளர்ப்பவர்கள் நெட்டிகளை வளர விடமாட்டார்கள். நெட்டிகளை வெயிலில் காய வைத்து மாலை கோர்க்க தாழம்பு நார் பயன்படுத்துவர்.
மாட்டின் அலங்காரத்தின் அரியக்குடி மணி மிகவும் முக்கியம். இந்த மணியை மாட்டில் கட்டிவிட்டால் ஒரு கிலோ தூரத்திற்கு முன்பாகவே மாடு வருவது தெரியும். படங்களில் பார்ப்பதை போல ஜல் ஜல் என சத்தம் கேட்கும். கழுத்து கயிறு, கொம்புக் கயிறு, மூக்கணாங்கயிறு ஆகியவற்றை சந்தைகளில் வாங்கிவிடுங்கள்.