இந்திய அரசியலமைப்பை சட்டத்தை உருவாக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் என நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதில் இந்திய அரசியல் நிர்ணய சபையின் 15 பெண்களுக்கும் பங்குண்டு. அவர்களில் தாக்ஷாயணி வேலாயுதன் மட்டுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் தீண்டாமை கொடுமையைக் கடுமையாக எதிர்த்தார். மேலும் அதிகாரங்களை மையப்படுத்துவதற்கு எதிராக அரசியல் நிர்ணய சபையினரையும் எச்சரித்தார்.
தாக்ஷாயணி வேலாயுதன் 1912ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சிறிய தீவான முலவுகாட்டில் பிறந்தவர். புலையா சமூகத்தைச் சேர்ந்த வேலாயுதன் சாதிய கட்டமைப்பால் கடுமையான பாகுபாடுகளை சந்தித்தார். புலையர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் விவசாயத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்தனர். உயர்சாதியினர் இவர்களை பொது சாலையைப் பயன்படுத்த தடை விதித்தனர். மேலும் புலையர் சமூதாய பெண்கள் தங்களது உடலை மூடுவது தடைசெய்யப்பட்டது.
பல சவால்களுக்கு மத்தியிலும் வேலாயுதன் மகாராஜா கல்லூரியில் பி.எஸ்.சி வேதியியல் படித்தார். அதைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி திட்டத்தில் சேர்ந்தார். சிரமங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிந்து தன்னை ஆரம்பக்கட்டத்தில் எதிர்த்தவர்களிடம் புறக்கணிக்க முடியாத வலிமையான அடையாளத்தை உருவாக்கினார். பள்ளியில் படிக்கும் போது மேல் ஆடை அணிந்த முதல் புலையர் சமுதாய பெண்ணும் தாக்ஷாயணி தான்.
1913ஆம் ஆண்டில் கொச்சியில் நடந்த நிக்ழவு தாக்ஷாயணியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நிக்ழவு தாக்ஷாயணியின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது வாழ்க்கை வரலாற்றுக்கு “கடலுக்கு ஜாதி இல்லை” என்று தலைப்பிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அதாவது சமூகத்தை போலல்லாமல் கடல் சாதி அல்லது சமூக பின்னணியின் அடிப்படையில் மக்களை வேறுபடுத்துவதில்லை என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
மேலும் படிங்க சுதந்திர போராட்டத்தின் முதல் வீராங்கனை ராணி லட்சுமி பாய்
அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்களிப்பு
தாக்ஷாயணி வேலாயுதன் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 34 வயதிலேயே அரசியல் நிர்ணய சபையின் ஒரே தலித் பெண் உறுப்பினராக இருந்தார். அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரத்தை மையப்படுத்துதல் என்ற கருத்துக்கு எதிராக அரசியல் நிர்ணய சபையில் குரல் எழுப்பினார்.
ஆட்சிக் கட்டமைப்பில் அதிகாரப் பரவலாக்கம் ஒரு முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். குறிப்பாக வரைவு அரசியலமைப்பில் பிரிவு 11க்கு வலுவாக வாதிட்டார். இது தீண்டாமை ஒழிப்பு மற்றும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டரீதியான விளைவுகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது. பிரிவு 11/17 ஐ ஆதரிப்பதன் மூலம் இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய தீண்டாமையை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தாக்ஷாயணி வேலாயுதன் தலித்துகளின் உரிமைகளுக்காக வாதிடுவதில் குறிப்பிட்ட கவனம் செலுத்தினார். 1977 ஆம் ஆண்டில், மகிளா ஜாக்ரிதி பரிஷத் என்ற அமைப்பை நிறுவுவதற்கு முயற்சி எடுத்தார். சமூகத்தில் தாக்ஷாயணி வேலாயுதன் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் கேரள அரசு 2019ல் அவரது பெயரில் விருது ஒன்றை அறிமுகப்படுத்தியது. கேரள மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த பெண்களைக் கௌரவிப்பதற்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.