ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது செட்டிநாடு ஸ்டைல் இறால் மசாலா. இறாலில் அதிக புரதம் உள்ளது அதே நேரம் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கும் இறாலில் உள்ள ஊட்டச்சத்துகள் உதவுகின்றன. செட்டிநாடு ஸ்டைல் சமையல் நீங்கள் நினைப்பதை விட சற்று எளிதானதும் கூட. இறால் வெகு விரைவில் சமைக்ககூடிய உணவாகும். அதாவது நன்றாக கொதிக்கும் கிரேவியில் இறால் போட்டால் அது எளிதில் வெந்துவிடும். எனவே அரை மணி நேரத்தில் வேகமாக இந்த சமையலை முடித்துவிடலாம்.
செட்டிநாடு இறால் மசாலா செய்யத் தேவையானவை
- இறால்
- வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி பூண்டு விழுது
- சோம்பு
- பட்டை
- தயிர்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
கவனம் கொள்க
முதலில் 300 கிராம் இறால் தோலை நீக்கி தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திவிடுங்கள். இதை நாம் சமையலின் இறுதிக்கட்டத்தில் சேர்ப்போம்.
இறால் மசாலா செய்முறை
- பேனில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு 25 கிராம் பட்டையை சின்ன சின்னதாக உடைத்து போடவும்.
- பட்டை வறுபட்டவுடன் 50 கிராம் அளவிற்கு சோம்பு சேர்க்கவும். சோம்பு பொன்னிறத்திற்கு வந்த பிறகு 100 கிராம் அளவிற்கு வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போடவும்.
- செட்டிநாடு சமையலில் இது மிகவும் எளிதாக சமையலாகும். வெறும் சோம்பு பயன்படுத்தி சுவையாக சமைக்க முடியும் என்பதை இந்த இறால் மசாலா உணர்த்துகிறது.
- குறைந்த தீயில் வெங்காயத்தை வதக்கும் போது அது எட்டு நிமிடங்களில் பொன்னிறத்திற்கு மாறிவிடும்.
- தற்போது இஞ்சி பூண்டு விழுது 50 கிராம் சேர்க்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாடை போனவுடன் 100 கிராம் அளவிற்கு இரண்டு மீடியம் சைஸ் தக்காளிகளை நறுக்கி சேர்க்கவும்.
- அடுத்ததாக இறால் மசாலாவுக்கு தேவையான 15 கிராம் மஞ்சள் தூள், காரம் கொடுக்க 25 கிராம் மிளகாய் தூள் போட்டு தக்காளியுடன் மிக்ஸ் செய்து வதக்கவும்
- தேவையன அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அனைத்தையும் கிளறி விட்டு கொதிக்க விட்டால் திக் கிரேவி போல் ஆகிவிடும்.
- அதே போல தண்ணீர் ஊற்றிய பிறகு தக்காளி பேஸ்ட் போல மாறவேண்டும். அதாவது சமைத்த பிறகு தக்காளி நம் கண்களில் தென்படவே கூடாது.
- தண்ணீர் சுண்டும் அளவிற்கு நன்கு சமைக்கவும். தற்போது மிக முக்கியமான தயிரை 50 கிராம் அளவிற்கு சேர்க்கவும்.
- இதை கிளறிய பிறகு கழுவி சுத்தப்படுத்திய இறாலை மசாலாவில் போடவும்.
குறைந்த தீயில் ஐந்து முதல் ஆறு நிமிடங்களில் இறால் நன்கு வெந்துவிடும். ரசம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு இது மிகவும் அற்புதமாக இருக்கும்.