விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஏழாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. முந்தைய சீசன்களில் ஒரு வீடாக இருந்த பிக்பாஸ் இந்த முறை இரண்டாக பிரிக்கப்பட்டது. கமல்ஹாசன் புரோமோவில் சொன்னபடியே இரண்டு வீடுகள் இருந்தன. ஸ்மால் பாஸ் என பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மற்றொரு வீட்டை உருவாக்கினர். அதற்கு ஸ்மால் பாஸ் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.
எழுத்தாளர் பவா செல்லத்துரை, சீரியல் நடிகர் யுகேந்திரன், சீரியல் நடிகை வினுஷா, நடிகர் கவினின் நண்பர் பிரதீப், ஐஷூ, அக்ஷயா, வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, கூல் சுரேஷ், அனன்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் விக்ரம், விஷ்ணு விஜய், நிக்ஸன், ரவீனா தஹா, அராத்தி பூர்ணிமா, நடிகை விசித்ரா, விஜய் வர்மா, மாயா, நடன கலைஞர் மணிசந்திரா உட்பட 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
முதல் மூன்று வாரங்களில் அனன்யா, விஜய் வர்மா ஆகியோர் எவிக்ட் ஆன நிலையில் எழுத்தாளர் பவா செல்லத்துரை பிக்பாஸ் அனுமதியுடன் தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 28ஆவது நாளில் ஐந்து பேர் வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்தனர். அந்த ஐந்து பேர் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ், அர்ச்சனா, அன்னபாரதி, பாடகர் கானா பாலா, பிராவோ ஆவர்.
ஐந்தாவது வாரத்தில் பிரதீப்புக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்ட் பெரும் சர்ச்சையில் முடிந்தது. பெண் போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்க கமல்ஹாசனும் அதை ஏற்றுக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து அவரை வெளியேற்றினார். இதில் பிரதீப் தரப்பு வாதத்தை கமல்ஹாசன் கேட்கவில்லை என குற்றச்சாட்டுகள் குவிந்தன.
கமல்ஹாசன் தன்னுடன் விக்ரம் படத்தில் நடித்த மாயாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என இணையத்தில் பலரும் புலம்பினர். இந்த பிரச்சினையில் அர்ச்சனா மட்டும் சிக்கவில்லை. பிரதீப் தனக்கு எந்த அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை என கூறிவிட்டார். அடுத்தடுத்த வாரங்களில் இது அவருக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.
மாயாவுடன் கூட்டு சேர்ந்த பூர்ணிமா, நிக்ஸன், ஜோவிகா, விக்ரம், ரவீனாம், ஐஷூ புல்லி கேங் என பிக்பாஸ் ரசிகர்களால் அழைக்கப்பட்டனர். இவர்கள் கொடுத்த டார்ச்சரை அர்ச்சனா, விசித்ரா கூட்டாக சமாளித்தனர். ஆனால் விசித்ரா திசை மாறிவிட்டார். ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என தெளிவாக வாக்களித்தனர்.
90 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பூர்ணிமா, மாயா, விசித்ரா, அர்ச்சனா, மணி, விஷ்ணு விஜய், தினேஷ், விஜய் வர்மா ஆகியோர் பிக்பாஸில் தொடர்ந்தனர். அந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த வாய்ப்பு மற்றும் மாயாவின் பேச்சை நம்பி 16 லட்சம் ரூபாய் பெட்டியை தூக்கி கொண்டு பூர்ணிமா போட்டியில் இருந்து நடையை கட்டினார். மாயாவுடன் சேர்ந்து விசித்ரா பயணித்ததால் ரசிகர்கள் அவருக்கு வாக்கு செலுத்துவதை நிறுத்தினர். இதன் விளைவாக அவர் 98ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார்.
மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார். அர்ச்சனா, மாயா, விஷ்ணு விஜய், மணி, தினேஷ் ஆகியோர் டாப் 5ற்குள் நுழைந்தனர். இறுதிவாரம் என்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். கடைசி வாரம் என்று கூட பார்க்காமல் அர்ச்சனாவை வம்பிழுக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.
ஐந்து நாட்கள் நடைபெற்ற வாக்கெடுப்பில் அர்ச்சனா அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னராக உருவெடுத்துள்ளார். பிக்பாஸூம் மக்களின் மனங்களை கவர்ந்த போட்டியாளர் என அர்ச்சனாவை குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக வைல்டு கார்ட் போட்டியாளர் வின்னர் ஆகியுள்ளார்.
இரண்டாவது இடம், மூன்றாவது இடம் மற்றும் இதர விவரங்கள் விரைவில் தெரியவரும்.