தென் இந்தியாவின் மான்செஸ்டராக விளங்கும் கோயம்பத்தூர் இயற்கை எழில் கொண்ட நகரமாகும். கோவை மாவட்டத்தில் சுற்றிப்பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
மருதமலை
மருதமலை முருகன் கோயில் கோவை மாவட்டத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமானின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இந்தக் கோயில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பச்சை பசுமையான இயற்கை எழில் மிகுந்த மருதமலையின் உச்சியில் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்திற்கு செல்ல காந்திபுரத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல படிகட்டுகளும் உள்ளன. வாகனங்கள் மூலமாக செல்ல சாலை வசதியும் இருக்கிறது. அதன் அருகிலேயே உள்ள பாம்பாட்டி சித்தர் கோயில் மிகவும் பிரபலமானதாகும்.
மேலும் படிங்க நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
வால்பாறை
இந்த இடம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் நான்காயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களில் வால்பாறையும் ஒன்று. இது தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. வால்பாறை தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. இங்குச் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏராளமான இடங்கள் உள்ளன.
ஆழியார் அணை
இந்த அணை பொள்ளாச்சியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குச் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திட அற்புதமான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆழியார் அணையில் நீங்கள் படகு சவாரி செய்தும் மகிழலாம்.
மேலும் படிங்க Trekking Spots: தமிழகத்தின் கடினமான பத்து மலையேற்றம்
குரங்கு அருவி
இந்த அருவி ஆழியார் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. குரங்கு அருவியில் குளிக்க ஒரு நபருக்கு 30 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வெள்ளயங்கிரி மலை
இந்த மலை கோவையில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. வெள்ளயங்கிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 5,500 அடி உயரத்திற்கு மேல் இருக்கிறது. மலையின் உச்சியில் சிவன் கோயில் உள்ளது. சிவ பக்தர்களுக்கு இந்த மலை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ஈஷா யோகா
வெள்ளயங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இங்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் படிங்க Chennai Tourism : சென்னை மாநகரில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்
சிறுவாணி நீர்வீழ்ச்சி
கோவையின் குற்றாலம் என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி கோவையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் வரும் தண்ணீர் மிகவும் தூய்மையானதாகும். இது கோவையின் தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலம் என்றே சொல்லலாம்.
வைதேகி நீர்வீழ்ச்சி
இந்த நீர்வீழ்ச்சி கோவையில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் காட்டுக்குள் அமைந்துள்ளது. இந்த அருவியைக் காண விரும்புவோர் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.