உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் அனந்தாசனம். இது ஆங்கிலத்தில் Vishnu Pose என்று அழைக்கப்படுகிறது. அதாவது விஷ்ணு பகவான் படுத்திருப்பது போல இந்த ஆசனம் இருக்கும். அனந்தாசனம் செய்வதற்கு முன்பாக பயிற்சி ஆசனத்தில் இருந்து தொடங்கலாம்.
- சாதாரணமாக தரையில் படுத்து இடது கையால் தலையை தாங்கிப் பிடித்து அந்த பக்கமாக படுத்திருக்க வேண்டும்.
- அடுத்ததாக வலது கையை தரையில் ஊன்றி உடல் நேராக இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள். உடல் நேர்கோட்டில் இருக்க வேண்டும். கையை தரையில் அழுத்தி வையுங்கள். இப்போது வலது காலை மடக்காமல் 90 டிகிரிக்கு தூக்கவும்.
- மீண்டும் கீழே இறக்குங்கள். பத்து முறை வலது காலை மேலே தூக்கி மீண்டும் கீழே இறக்கி வைக்கவும்.
- இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். இதே போல வலது கையில் தலையை தாங்கிப் பிடித்து இடது கையை தரையில் அழுத்தி இடது காலை 90 டிகிரிக்கு தூக்கவும்.
- தற்போது அனந்தாசனத்திற்கு செல்லலாம். இடது கையில் தலையை தாங்கிப் பிடித்து வலது காலை பாதியாக மடக்கி வலது கை விரல்களால் வலது கட்டை விரலை பிடித்து 90 டிகிரிக்கு தூக்குங்கள். இதுவே அனந்தாசனம் ஆகும்.
- ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். அடுத்ததாக வலது கையில் தலையை தாங்கி பிடித்து இடது காலை பாதியாக மடக்கி இடது கை விரல்களால் இடது கால் கட்டை விரலை பிடித்து 90 டிகிரிக்கு தூக்குங்கள்.
- மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். இதே போல பத்து முறை பத்து விநாடிகளுக்கு செய்யுங்கள் .
- இதற்கு தளர்வு ஆசனமாக பாலாசனம் செய்யலாம். வஜ்ராசனம் நிலையில் இருந்து கைகளை மேலே உயர்த்தி அப்படியே கீழே இறக்கி தரையில் வைத்து பத்து விநாடிகளுக்கு படுத்திருங்கள்.
அனந்தாசனம் பலன்கள்
- மன அழுத்தத்தைக் குறைக்கவும், மூளையை அமைதிப்படுத்தவும் இந்த ஆசனம் பெரிது உதவுகிறது.
- செறிவு மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை அனந்தாசனம் மேம்படுத்துகிறது.
- உங்கள் உள் தொடைகள் மற்றும் தொடை எலும்புகளின் நெகிழ்வுத்தன்மை மேம்படுகிறது.
- சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கருப்பையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
- கழுத்து, முதுகு, மூட்டு மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்துவிடவும்.
இது போன்ற உடல் நலன் சார்ந்த யோகா கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.