குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே காமிக்ஸ் என்றால் பிடிக்கும். மார்வெல், டிசி, அனிமே, டிஸ்னி கதாபாத்திரங்கள் போன்றவை உலக அளவில் பல ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்த காமிக்ஸ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி தான் இந்த காமிக் கான் இந்தியா. இதற்கு முன்னதாக இந்த காமிக் கான் இந்தியா நிகழ்ச்சி டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் முதன்முறையாக இந்த காமிக் கான் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
மேலும் படிக்க: 90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த காதல் படங்கள்!
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலரும் பல்வேறு நகரங்களில் இருந்து வந்து தங்களுக்கு பிடித்த காமிக் கதாபாத்திரங்கள் போன்ற வேடத்தில் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் சர்வதேச காமிக்ஸ் ஓவியர்கள் ஜான் லெமன் மற்றும் பேரண்ட் போன்றவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதேபோல பிரபல அனிமே கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்த கலைஞர்களும் இந்த காமிக் கான் விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காமிக்ஸ் ரசிகர்களுக்காக 'எண்டுவார்ஸ் வால்யூம் 2 - டார்க் கான்குவெஸ்ட்' என்ற ஆங்கில புத்தகத்தையும், பிரபல பாடலாசிரியர் மதன் கார்கியால் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட 'இறுதிப்போர் - மன்னவன் ஒருவன்' என்ற புத்தகத்தையும் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். 'எண்டுவார்ஸ் - தி சூசன் 1' என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி மாற்றம் தான் இந்த இறுதிப் போர் புத்தகம். மேலும் இந்த புத்தகம் தொடர்பான வீரா என்ற விளம்பர பாடல் ஒன்றை இந்த விழாவில் அறிமுகம் செய்தனர். தற்போது இந்த பாடல் அனைத்து ஓடிடி தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தீவிரமான ஒரு டிசி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து லோகேஷ் கனகராஜ், "இறுதிப் போர் புத்தகத்தில் உள்ள அழுத்தமான கதாபாத்திரங்கள் படிப்பதற்கு உற்சாகமாக உள்ளது. நான் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதை கடந்து ஒரு புத்தக வாசிப்பாளர் என்ற அடிப்படையில் இந்த காமிக் கதைகள் என்னை அதிகம் கவர்ந்துள்ளது. இரும்பு கை மாயாவி, விக்ரம் வேதா, முகமூடி வேதாளன் போன்ற தமிழ் காமிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்த காமிக் புத்தகங்கள். சினிமா படம் போன்ற சுறுசுறுப்பையும் கிராபிக் நாவல்களின் தனி உலகத்தையும் சேர்த்து ரசிகர்களுக்கு தனித்துவமான முறையில் அமைந்துள்ளது இந்த 'இறுதிப்போர் - மன்னவன் ஒருவன்' புத்தகம்" என்று கூறினார்.
மேலும் படிக்க: கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகர் யார் தெரியுமா ?
மேலும் இது போன்ற தமிழ் மொழிமாற்றம் காமிக் புத்தங்களை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக கூறினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பிப்ரவரி 17, 18 ஆம் தேதி (சனி மற்றும் ஞாயிறு) நடைபெற்ற இந்த காமிக்கான் நிகழ்ச்சியில் பல ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த காமிக் கதாபாத்திரங்கள் வேடத்தில் கலந்து கொண்டனர். ஸ்பைடர் மேன், பேட்மேன், சூப்பர்மேன், பிக்காச்சு மற்றும் பல அனிமே வேடத்திலும் ரசிகர்கள் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.