தற்போதைய தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என பிப்ரவரி 2ம் தேதி அறிவித்தார். குறிப்பாக வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் எந்தவித அரசியல் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முழு கட்டமாக அரசியல் பிரவேசம் காண்பேன் அதுதான் எனது இலக்கு என நடிகர் விஜய் தெரிவித்து இருந்தார்.
இது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கட்சியின் பெயரை விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கியும் விஜய் மக்கள் இயக்க கொடியை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இத்தனை நாட்களாக விஜயின் திரைப்படங்களை திரையில் கண்டு மகிழ்ந்து, விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜயின் அறிவுறுத்தலின் பேரில் செய்து வந்த அவரது ரசிகர்கள் தற்போது அரசியல் களத்தில் குதித்து அரசியல்வாதியாகவே விஜய்-ஐ தலைவனாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரபலங்கள்
தமிழக வெற்றி கழகம் என விஜய் அறிவித்தபோது அவரது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ரசிகர்கள் கோலாலாகமாக கொண்டாடி வந்த நிலையில், விஜயின் அரசியல் வருகைக்கு தமிழகத்தின் முன்னணி அரசியல்வாதிகள் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து விஜயை வரவேற்றுள்ளனர். அதேபோல் விமர்சனங்களும் பல வகையில் விஜயின் தமிழக வெற்றிக கழக அரசியல் பிரவேசத்திற்கு வந்துள்ளது.
குறிப்பாக, விஜயின் அரசியல் வருகைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் விஜயை வரவேற்று வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
முதல் அரசியல் அறிக்கை
தனது அரசியல் கட்சி அறிவிப்பின் பின்பு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நன்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த பெருமதிப்பிற்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள் சகோதர, சகோதரிகள் ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என தெரிவித்திருந்தார்.
அரசியல்வாதியாக முதல் சந்திப்பு
விஜய் திரைப்பட படபிடிப்பின் போது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். இந்த நிலையில் விஜய் அரசியல் அறிவிப்பிற்கு பின்பு முதல்முறையாக அரசியல்வாதியாக தனது இன்று பிப்-5ம் தேதி ரசிகர்களை புதுச்சேரியில் சந்தித்துள்ளார்.
மலர் தூவி வரவேற்ற ரசிகர்கள்
இயக்குனர் வெங்கட் பிரபு, இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் மும்மரமாக நடித்து வருகிறார். அந்த படத்தின் படபிடிப்பானது தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்து பின்பு முதல்முறையாக சினிமா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வழக்கம் போல் சூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் மீது ஏறி நின்று தன்னை காண வந்த ரசிகர்கள் மத்தியில் தோற்றமளித்தார். அப்போது விஜயை பார்ப்பதற்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மலர்களை தூவி விஜயை வரவேற்றனர். அப்போது ரசிகர் ஒருவர் மாலை ஒன்றை விஜயை நோக்கி தூக்கி எறிந்தார். மாலையைப் பிடித்து தனது கழுத்தில் விஜய் அணிந்து கொண்டு மீண்டும் ரசிகர்களை நோக்கி மாலையை தூக்கி வீசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கூடியிருந்த ரசிகர்கள் மலர்களை விஜய் மீது தூவி கோஷங்களை எழுப்பி உற்சாகமாக கொண்டாடினார்கள். தொடர்ந்து விஜய் வழக்கம் போல் தனது செல்போனில் ரசிகர்களை செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்தார்.
கட்சி பெயரை அறிவித்ததோடு 2026-க்கு பின்பு சினிமாவில் நடிக்க மாட்டேன். குறிப்பாக சினிமாவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என விஜய் அறிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்த போதிலும், அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புதுச்சேரியில் நடைபெற்ற சூட்டிங் ஸ்பாட்டில் விஜயை சந்தித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.