பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினம் பலரின் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது. காலப்போக்கில் காதலின் ரசனைகளும், விருப்பங்களும் பல மாற்றங்கள் அடைந்துள்ளது. குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் காதலின் ரசனைகள் முற்றிலும் மறுபட்டுள்ளதை நாம் உணரமுடிகிறது. காதல் என்ற வார்த்தயை கேட்டாலே 90ஸ் கிட்ஸ்க்கு பிடிக்காது என்று இந்த சமூகத்தில் கருத்து பரவி வருகிறது. ஆனால் அது உண்மையில்லை என்றும் அந்த காதலுக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் எவர்க்ரீன் காதல் திரைப்படங்கள் சில இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். எத்தனை காதல் திரைப்படங்கள் வந்தாலும் காலம் கடந்தும் இன்றும் 90ஸ் கிட்ஸ் மனதை கவர்ந்த சிறந்த காதல் திரைப்படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
காதல் கோட்டை:
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான காதல்கள் மலர்வது ஃபேஸ்புக், வாட்சாப் போன்ற சமூக வலைத்தளங்களில் தான். சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் கூட காதலிப்பது இயல்பாக மாறிவிட்டது. ஆனால் 1996ல் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிக்கிறார்கள் என்று கூறினால் யாரும் அதை நம்பமாட்டார்கள். இந்த விஷயத்தை அனைவரும் நம்பும்படி முதன்முறையாக திரையில் காட்டிய படம் தான் காதல் கோட்டை. காதலின் பல்வேறு பரிமாணங்கள் சொல்லப்பட்ட தமிழ் சினிமாவில், ‘பார்க்காமலேயே காதல்' என்கிற புது ட்ரெண்டை உருவாக்கிய படம் இது. 'காதல் கோட்டை' திரைப்படத்தில் நடிகர் அஜித், நடிகை தேவயானி இருவரும் அவரவர் பாத்திரங்களில் ஒன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பர். கடிதத்தின் மூலம் காதல் காட்சிகளாகட்டும், போனில் பேச காத்திருக்கும் காட்சிகளாகட்டும் இன்று அதை நாம் பார்த்தால் கூட அந்த காலத்துக்கு நம்மை கூட்டி செல்லும், தேவா குரலில் பாடிய 'கவலைப்படாதே சகோதரா' பாடல், காதலியின் கரம் பிடிப்போமா என்று எங்கும் ஆண்களுக்கான ஆன்தம் ஆக மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த படம் 90ஸ் கிட்ஸ் சிறுவர்களாக இருக்கும் போது வெளியாகியிருந்தாலும் இன்றும் பலரின் மனம் கவர்ந்த திரைப்படமாக உள்ளது.
காதலுக்கு மரியாதை:
வழக்கம் போல கதாநாயகி ஷாலினியும் கதாநாயகன் விஜயும் காதலில் விழுகின்றனர், ஹீரோயின் வீட்டில் இருந்து எதிர்ப்பு வருகிறது, ஹீரோயினின் அண்ணன்கள் அவளை தாக்குகின்றனர். இதனால் ஹீரோயினுக்கு காதல் அதிகமாகிறது, திரும்பவும் தாக்கப்படுகிறார். இப்படி காதல் திரைப்படங்களுக்கான இலக்கணம் சற்றும் மாறாமல் எடுக்கப்பட்ட காட்சிகள் இந்த படத்தின் முதல் பாதி முழுக்க நிறைந்திருக்கும். சரி இந்த படம் தேறாது என ரசிகர்கள் நினைக்க, படத்தின் இரண்டாம் பாதியை வித்தியாசமாக படைத்து ரசிகர்கள் மனதில் காதலின் மீது மரியாதை ஏற்படுத்தியுள்ளார் இயக்குனர் பாசில். கோலிவுட் சினிமாவில் கதாநாயகியான அறிமுகமான நடிகை ஷாலினி, இளைய தளபதி விஜய் ஆகிய இருவருக்கும் காதலுக்கு மரியாதை படம் நல்ல வெற்றியை கொடுத்தது. பெற்றோருக்காக காதலை விட்டு கொடுக்கும் பிள்ளைகள் ஒரு பக்கம், பிள்ளைகளுக்காக தங்களது பிடிவாதத்தை விட்டு கொடுக்கும் பெற்றோர் மறுபக்கம் என காதலுடன் சேர்த்து குடும்ப பாசத்தையும் அழகாக சேர்த்து கொடுத்த படம் தான் காதலுக்கு மரியாதை. இசைஞானி இளையராஜா இசையில் என்னை தாலாட்டா வருவாளா போன்ற பாடல்கள் ரசிகர்களை தாலாட்ட, 90ஸ் கிட்கள் மட்டும் அல்லாது அனைவருக்கும் பிடித்த ஒரு எவர்க்ரீன் காதல் திரைப்படமாகவே இந்த படம் அமைந்தது.
அலைபாயுதே:
'நான் உன்ன விரும்பல... உன் மேல ஆசப்படல... நீ அழகா இருக்கேனு நினைக்கல... ஆனா இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு' இது 90ஸ் கிட்களின் மோஸ்ட் ஃபேவரட் வசனம் ஆக மாறிவிட்டது. காதல் படங்கள் என்றாலே காதல் ஜோடி சேர வேண்டும் அல்லது பிரிய வேண்டும் இதுதான் தமிழ் சினிமாவின் எழுதப்பட்ட விதி. ஆனால் இதை முதன்முறையாக மாற்றி ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்ட பின் கணவன் மனைவி இடையே நடக்கும் ஊடலை பற்றி அழகாக கூறிய படம் அலைபாயுதே. மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி நடிப்பில் வெளியான இந்த படத்துக்கு பிறகு தமிழகத்தில் ரகசிய திருமணங்கள் அதிகரித்தாக கூறப்படும் அளவுக்கு அன்றைய காலகட்டத்தில் இத்திரைப்படத்தின் தாக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காதலர் தினம்:
1999ல் வெளியான காதல் காவியம் தான் காதலர் தினம், காதலர்களுக்கு பிப்ரவரி 14 மட்டும் அல்ல, வருடத்தின் எல்லா நாட்களும் காதலர் தினமே என்று எடுத்துக்கூறிய படம் இது. குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே என்ற தமிழ் மக்களுக்கு பரிச்சயம் இல்லாத முகங்களை வைத்து ஒரு அட்டகாசமான காதல் கதையை கொடுத்துள்ளார் இயக்குனர் கதிர். ஏழை குடும்பத்தில் பிறந்த ஹீரோ குணாலுக்கு, இன்டர் நெட் வழியாக ஹீரோயின் சோனாலி பிந்த்ரே அறிமுகமாகிறார். கணினி வழியே இருவரும் காதலை வளர்க்கின்றனர். இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களில் காதலித்து திருமணம் செய்யும் ஸ்டைல் அதிகமாகி உள்ளது. ஆனால் இன்டெர் நெட்டில் காதல் என்பது அந்த காலத்தில் ஒரு புது கான்செப்ட், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் இயக்குனரின் வண்ணமயமான காட்சிகளும் இன்று வரை 90ஸ் கிட்களின் மனதில் பதிந்துவிட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை.
மின்னலே:
தமிழ் சினிமாவில் ரொமான்டிக் படங்களில் மின்னலே படத்திற்கு முக்கிய இடம் உண்டு. அலைபாயுதே படத்தில் சாக்லேட் பாயாக காட்சியளித்த ஹீரோ மாதவன் இந்த படத்தில் ஹீரோயின் ரீமாசென்னை துரத்தி துரத்தி காதலிக்கும் போது கண்களில் காதலுடனும், நடிகர் அப்பாஸ் உடன் மோதல் ஏற்படும் காட்சிகளில் கண்களில் கோபத்துடனும் நடிப்பில் கலக்கி இருப்பார். அப்பாஸ் அடையாளத்துடன் ரீமாசென்னை சுற்றி சுற்றி காதலிக்கும் மாதவன், இளம்பெண்களின் கனவு கண்ணனானதும், வசீகரா பாடலில் வளைந்து நெளிந்து நடனமாடி இளைஞர்கள் மனதை கொய்த ரீமாசென்னும் மின்னலே படத்தின் வழியே என்றும் 90ஸ் கிட்ஸ்களின் நினைவில் நிறைந்திருப்பார்கள்.
Image source: google